289. திருக்குறுங்குடி கிராமமும் 'கைசிக' நாட்டிய நாடகமும்
இரு வாரங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் உள்ள வானமாமலை மடத்தில், ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுவாக, அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. நண்பர் ஒருவர் கூறக் கேட்டு, அதை காணச் சென்றேன்.
திருக்குறுங்குடி (இது ஒரு வைணவ திவ்ய தேசம் ஆகும்) கிராமத்திலிருந்து 40 விவசாயக் குடும்பத்துச் சிறுமியர் அடங்கிய குழு 'கைசிக நாடகம்' என்று அழைக்கப்படும் பழமையானதொரு நாட்டியக் கலை வடிவத்தை அரங்கேற்றியது. தூண்கள் நிறைந்த அந்த மடத்துக் கூடம் நாட்டிய நாடகம் நடத்த ஏற்றதாக இல்லாதிருந்தும், அச்சிறுமியர் சிரமமின்றி, மிக இயல்பாக, அற்புதமான முக பாவங்களுடனும், நேர்த்தியான நடன அசைவுகளுடனும் நடித்தது கண்டு பிரமித்துப் போய் விட்டேன் !
ஆடிய யாருக்கும், பரதம் பற்றி ஒன்றும் தெரியாது ! கடின உழைப்பும், பயிற்சியும், உள்ளிருக்கும் திறமையை வெளிக் கொணர்ந்து மிளிரச் செய்ய வல்லவை என்பதற்கு இந்த நாட்டிய நாடகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று தயங்காமல் கூறுவேன் ! திருக்குறுங்குடியை விட்டு அச்சிறார்கள் வெளி ஊர் ஒன்றுக்கு வருவது இதுவே முதன் முறை என்று அறிந்ததும் பிரமிப்பு அதிகமானது.
இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, 'கைசிக நாடகம்' மற்றும் திருக்குறுங்குடி கிராம வளர்ச்சி பற்றி சேகரித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. இந்த 'கைசிக நாடகம்' திருக்குறுங்குடிக் கோயில் பெருமானான வைணவ நம்பி மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட, நம்படுவன் என்னும் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் வாயிலாக, பிரம்ம ராக்கதன் ஆக சபிக்கப்பட்ட பிராமணர் ஒருவர் சாப விமோசனமும், மோட்ச சித்தியும் பெறும் பழங்கதையை அடிப்படையாகக் கொண்டது. மனித நேயத்தின் மேன்மையையும், தூய்மையான பக்தியின் உன்னதத்தையும், சாதி இன வேறுபாடு வெறுக்கத்தக்கது என்பதையும் பறைசாற்றும் இந்த கைசிக நாடகமானது, 13-ஆம் நூற்றாண்டிலிருந்து, மன்னரையும், மக்களையும் ஒரு சேர வெகுவாகக் கவர்ந்து வந்துள்ளது.
2. பண்டைக்கால கோயில் சமூகங்களின் வழிபாட்டு முறையில், பாட்டும், கூத்தும் சிறப்பிடம் பெற்றிருந்ததையும் இதிலிருந்து உணரலாம். சாய்ந்த கொண்டை மற்றும் அசுரனின் உடை அலங்காரங்களில், கேரளப் பாரம்பரியத்தின் தாக்கம் இருப்பதை உணர முடிந்தது. ஒரு காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இந்த கிராமம் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். கைசிக நாடகத்தைப் பற்றி விரிவாக ஒரு பதிவு பின்னர் எழுத உத்தேசம்.
3. திருக்குறுங்குடி கோயிலில் மட்டுமே, புனித கைசிக (கார்த்திகை மாத) ஏகாதசி தினத்தன்று இரவு, பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 5 மணி நேர நாட்டிய நாடகம், நடிப்பவரும் ஆதரிப்பாரும் இன்றி, நாடகம் பற்றிய ஓலைக்குறிப்புகள் மறைந்து போய், 50 ஆண்டுகளுக்கு முன் மெல்ல வழக்கொழிந்தது.
4. பத்து ஆண்டுகளுக்கு முன், முனைவர் ராமானுஜம் (National school of Drama), கூத்துப்பட்டறை நடிகர் முத்துசாமி மற்றும் TVS குடும்பத்தைச் சேர்ந்த நடனமணி அனிதா ரத்னம் ஆகியோரின் பெரு முயற்சியால், இக்கலைவடிவம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இந்த நாடகத்தில் ஒரு காலத்தில் நடித்து வந்த கிராமத்து முதியவர்களிடம் பேசி, பழைய கையெழுத்துக் குறிப்புகளைத் தேடி தூசு தட்டிப் படித்து, கோயில் சிற்ப நுணுக்கங்களை ஆய்ந்து, வைணவ அறிஞர்களுடனும், அரையர் கலைஞர்களுடன் விவாதித்து, பழைய வடிவை ஒத்த ஒரு மறு கலை வடிவத்தை இம்மூவரும் உருவாக்கினர். நமது கிராமத்துக் கோயில் பாரம்பரியத்திற்கு ஒரு மறு வடிவம் என்றும் இதைக் கொள்ளலாம் !
5. பின்னர், திருக்குறுங்குடி கிராமத்துச் சிறார்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை நடிக்க வைத்து, அதன் வாயிலாக இந்த அற்புதமான 'கைசிக நாடக' கிராமியக் கலை வடிவத்தை மீட்டு மிளிரச் செய்திருக்கும் இம்மூவரும், அதைக் கற்று திறம்பட நடித்துக் கொண்டிருக்கும் கிராமத்துச் சிறார்களும் மிக்க பாராட்டுக்குரியவர்கள். பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு !
6. திருக்குறுங்குடிக்கு அருகே உள்ள பாளையங்கோட்டையில் கிறித்துவர்கள் அதிகமாகவும், ஏர்வாடியில் இஸ்லாமியர்கள் அதிகமாகவும் வசிக்கின்றனர். இம்மக்களில் பலரும் இங்கு வந்து, இந்த நாட்டிய நாடகத்தைக் கண்டு களிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஓர் அருமையான சான்று ! முதலில், நடனம் கற்கவும், நாடகத்தில் நடிக்கவும் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயங்கிய திருக்குறுங்குடி கிராமத்துப் பெற்றோர், இந்த வருட நாட்டிய நாடகத்தின் முடிவில், பலரும் தங்கள் பிள்ளைகளை வெகுவாகப் பாராட்டுவதைக் கண்டு பெருமிதம் அடைந்தனர்.
7. திருக்குறுங்குடி வைணவத் திருத்தலமாக இருப்பினும், இங்கு கிறிஸ்துமஸ் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகத் தெரிகிறது !
திருக்குறுங்குடி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 289 ***